search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு கட்சி"

    பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இப்படி தொடர்ந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.

    மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

    அத்துடன், இந்திய அரசியலில் குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அதெல்லாம் பழங்கதை என்ற நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன.

    2004 பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 59 எம்.பி.க்கள் இவ்விரு கட்சிகள் சார்பில் தேர்வு பெற்றிருந்தனர். கடந்த 2014 தேர்தலில் இவ்விரு கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதான் இதுவரையில் அக்கட்சிகள் பெற்ற குறைவான எண்ணிக்கையாக இருந்து வந்தது.

    இந்த தேர்தலில்தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் மட்டுமே இக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

    கேரளாவில் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றார்.

    மீதி 4 இடங்களையும் தமிழ்நாட்டில் இருந்து இக்கட்சிகளுக்கு பெற்றுத்தந்த புண்ணியம், தி.மு.க.வைச் சேரும். தி.மு.க. கூட்டணியில் இணை ந்து தலா 2 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர். நடராஜன் கோவையிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும் வெற்றி பெற்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செல்வராசு நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வென்றனர்.

    நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட இடங்கள் 45. இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட இடங்கள் 55. ஆக இவ்விரு கட்சிகளும் கூட்டாக போட்டியிட்ட இடங்கள் 100. வெற்றி பெற்ற இடங்கள் 5. எனவே 5 சதவீத வெற்றியை மட்டுமே இந்த கட்சிகள் பெற்றுள்ளன.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 2004-ல் 43 தொகுதிகளிலும், 2009-ல் 16 தொகுதிகளிலும், 2014-ல் 9 தொகுதிகளிலும் இந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது.

    இந்த முறையோ 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, கொடி கட்டிப்பறந்த மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஒரு இடம் கூட இக்கட்சிக்கு கிடைக்கவில்லை.

    இதே நிலைதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்த கட்சி சார்பில் பீகாரில் பெகுசாராய் தொகுதியில் களம் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மாணவர் தலைவர் கன்னையா குமாரும் தோல்வியைத்தான் தழுவினார்.

    மேற்கு வங்காளத்தில் இவ்விரு கட்சிகள் சார்பில் களம் கண்டவர்களில் ஒருவர் தவிர்த்து அத்தனை பேரும் டெபாசிட் தொகையினை பறிகொடுத்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது.

    1. பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

    2. நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.

    3. நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.

    இந்த அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்யாத நிலையில், 2 கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்டுகளின் கனவு பலிக்காது என்று கேரளாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். #BJP #TamilisaiSoundararajan #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் ஷோ தலைமை தாங்கினார்.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    சபரிமலை ஆச்சாரத்தை மீறி இந்து பெண்கள் யாரும் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு அரசு இந்து விரோத அரசாக மாறி இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சி செய்கிறது. அது கனவில் கூட நடக்காது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை என்ன விலை கொடுத்தும் தடுப்போம். கேரளாவில் இந்த அரசு தான் கடைசி கம்யூனிஸ்டு அரசாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டத்தில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கூட விழாவில் கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பங்கேற்றார். விழா முடிந்து அவர் காரில் சென்ற போது அங்கு கையில் கருப்பு கொடிகளுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் அவரது காரை முற்றுகையிட்டனர். அவரை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாரதிய ஜனதாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மந்திரியை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர். #BJP #TamilisaiSoundararajan #Sabarimala
    டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியலில் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடந்தது.

    இதையொட்டி சேலத்தில் கலெக்டர் அலுவகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு உள்பட பல கட்சிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டீசல், பெட்ரோல், கியாஸ் விலையை குறைக்க கேட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    அப்போதும் கலைந்து போகாததால் மறியலில் ஈடுபட்ட 158 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலையை குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். #tamilnews
    சேலம் - சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபயணம் புறப்படும் நிகழ்ச்சி அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. போலீசார் நடைபயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    தடையை மீறி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைப்பயணம் புறப்பட்டனர்.

    அப்போது போலீசார் தடுத்து 44 பெண்கள் உட்பட 395 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களை இரவு 7.30 மணியளவில் விடுவித்தனர். ஆனால் அவர்கள், நாங்கள் வெளியே சென்றால் தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொள்வோம் என்றும், 100 பேருக்கு நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் போலீசாரிடம் கூறினர்.

    இதை தொடர்ந்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 15 பேர் கொண்ட குழுவினரிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சி.பி. சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து போலீசார் அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். வெளியே வந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் தலைமையில் நள்ளிரவில் 12 மணியளவில் அண்ணாசிலையில் இருந்து மீண்டும் நடைபயணத்திற்கு புறப்பட்டனர்.

    அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நடை பயணத்திற்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்ததால் அவர்களை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 பெண்கள் உள்பட 90 பேர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலையை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடைபயணம் தொடங்கியவுடன் போலீசார் தலைவர்களையும், ஊழியர்களையும் கீழே தள்ளி வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்து அடைத்துள்ளனர்.

    போலீசாரின் இத்தகைய ஜனநாயக விரோத, ஏதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    ஜனநாயக முறையில் நடைபெறும் நடைபயணத்தை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அட்டவணை 9-ல் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் மறியல் போராட்டத்துக்கு திரண்டு வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இறங்கி இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பீம்ராவ் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 50 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.
    புகார் கொடுக்க வருபவர்களிடம் சுயபுராணம் பாடுவதாக போலீஸ் அதிகாரி மீது கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் டவுன் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக இருப்பவர், யார் புகார் கொடுக்க வந்தாலும் தனது சுய புராணத்தை பாடி வந்துள்ளார்.

    விசாரணைக்கு வருவோர், மனுதாரர்கள் என யார் வந்தாலும் தனது வருமானம், குழந்தைகளின் படிப்புச் செலவு போன்றவை பற்றி கூறி வந்தாராம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்கச் சென்றபோது அவர்களிடமும் இதே கதையை கூறியதோடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என செல்லாமல் வாழும்படி தெரிவித்தாராம்.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த வி‌ஷயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தலையிட்டு புகார் கொடுக்க வருவோரிடம் போலீஸ் அதிகாரி சுயபுராணம் பாடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×